அயோத்தி: கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்

1 mins read
7b8ff12d-18b4-4259-ac5d-b42db9705524
அயோத்தி ராமர் கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரைக் காண திரளும் ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் திணறி வருகின்றனர்.

கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பக்தர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் பால ராமா் சிலை நிர்மாணிக்கப்பட்டு செவ்வாய் முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

லக்னோவில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள பாராபங்கியில் இருந்து அயோத்தி நோக்கிச் செல்லும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

நடைப்பயணமாக அயோத்திக்குச் செல்லும் பக்தர்களும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாராபங்கி காவல்துறை அதிகாரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற, ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஆளுநர்கள் உள்ளிட்டவர்களே பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அயோத்திக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

ஒரே நாளில் அயோத்தி விமான நிலையத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து 100 தனி விமானங்களில் முக்கிய பிரமுகர்களும் வந்துள்ளனர்.

காலை 7 மணி முதல் 11.30 மணி வரைக்கும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவாரகள்.

குறிப்புச் சொற்கள்