விதவையின் கருக்கலைப்புக்கு அளித்த அனுமதியை மீட்டுக்கொண்டது நீதிமன்றம்

2 mins read
f7bc74fe-cb80-4dbf-8bfa-3dbf3bbbaff4
படம் - ஊடகம்

புதுடெல்லி: கணவரை இழந்த 29 வார கர்ப்பிணியின் கருவைக் கலைப்பதற்கு அண்மையில் அளித்த அனுமதி உத்தரவை மீட்டுக்கொண்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

விதவைப் பெண்ணின் கருவைக் கலைப்பதற்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 4ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமாகி, அக்டோபர் மாதத்தில் கணவரை இழந்துள்ளார் கர்ப்பிணிப் பெண்.

இதனால், அவரது மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், கருவைக் கலைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி, இப்போது அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கைகள், மனநல நிபுணர்களின் அறிக்கைகளின்படி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கருவைக் கலைப்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையும் மருத்துவ ரீதியாக ஒப்புதல் அளிக்காத சூழலில், கருவில் இருக்கும் சிசுவின் உயிர் வாழும் உரிமையைக் கருத்தில் கொண்டு நீதிபதி தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி பிரசாத் அளித்த தீர்ப்பின்போது, “மனுதாரரின் மணவாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. தனது கணவரின் இறப்பால் கர்ப்பிணியின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் அளித்த மருத்துவ அறிக்கையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இந்தச் சூழ்நிலையில், கர்ப்பிணி தனது கருவைக் கலைக்க அனுமதி அளிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் ஏனெனில், கருவைத் தொடர அனுமதியளிப்பது அவரது மன உறுதியைக் குலைக்கலாம் என்றும் அவர் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை நாடலாம் என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்