மும்பை: மத்திய அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் வழிப் பேரனும், சட்டமன்ற உறுப்பினருமான ரோகித் பவாருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு ரோகித் பவாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரோகித் பவார் புதன்கிழமை விசாரணைக்கு முன்னிலையானார்.
மகாராஷ்டிர மாநிலக் கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் பவார், அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்வேன் எனவும் தெரிவித்தார்.