ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இச்சாபுரத்தில் தொண்டர்களிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது, காலஞ்சென்ற முதல்வரும் தனது தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நடைப்பயணம் இந்த ஊரில்தான் நிறைவடைந்தது என அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் படும் இன்னல்களைப் புரிந்துகொண்ட அவர், தனக்கு வாய்ப்பளித்தால் நீங்கள் படும் துன்பம் நீங்குவதற்கு வழிபிறக்கும் என்றார். அதேபோல் மக்கள் அவருக்கு வாக்களித்து முதல்வராக்கினர்.
“என் தந்தை முதல்வரானதும் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியின்படி, 46 லட்சம் வீடுகளை இலவசமாகக் கட்டிக் கொடுத்தார். அதேபோல் எனது நடைப்பயணம் இச்சாபுரத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
“ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இருந்தவரை, அவர் பாஜகவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார். ஆனால், இப்போது ஆந்திராவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இங்குள்ள சில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன,” என்றார் ஷர்மிளா.
பாஜகவுக்கு ஆந்திராவில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் ஜெகன் மோகன் அரசு பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
“ஒரு முறை கூட ஜெகன்மோகன் ஆந்திர மாநிலத்தின் சிறப்புத் தகுதி விவகாரம் குறித்து பாஜகவிடம் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவிற்கு சிறப்புத் தகுதி கிடைக்கும். அதற்கான உறுதியை ராகுல்காந்தி அளித்துள்ளார். மக்களின் நலன் குறித்து ஆலோசிக்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே,” என்றார் ஷர்மிளா.