கோல்கத்தா: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வரும் மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, “காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. ஏற்கெனவே நாங்கள் கூறியதுபோல் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறோம். நாட்டில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்பது உறுதி என்று கூறியுள்ளார்.
நாங்கள் காங்கிரசுக்குக் கொடுத்த முன்மொழிவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.
நாங்கள் இண்டியா கூட்டணியில்தான் இருக்கிறோம். இருப்பினும் ராகுல் காந்தியின் நடைப்பயணம் மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காகக் கூட எங்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. இது எங்களுடன் அவர்களுக்கு எவ்வித உறவும் இல்லை என்பதையே காட்டுகிறது என்றார்.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரசுக்கு மூன்று இடங்களை மட்டுமே திரிணாமூல் காங்கிரஸ் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும், திரணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

