ஜெகன் மோகன் கட்சியிலிருந்து மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விலகல்

ஜெகன் மோகன் கட்சியிலிருந்து மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விலகல்

2 mins read
c4922489-b9fd-4a31-be68-dd02123d2c77
ஸ்ரீகிருஷ்ண தேவராயுலு. - கோப்புப் படம்: ஊடகம்

குண்டூர்: ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.

அவர் குண்டூர் அருகேயுள்ள நரசராவ்பேட்டா தொகுதி மக்களவைத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தேவராயுலு.

ஸ்ரீகிருஷ்ணா அவரது விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கடந்த நாலரை ஆண்டுகள் தொகுதி மக்களுக்காக என்னால் இயன்ற பணிகளைச் செவ்வனே செய்துள்ளேன்.

இருப்பினும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சில வேறுபாடுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றாலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எனது தொகுதிக்கு வேறொருவரை வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து எனது பிரச்சினைகளையும், கட்சியில் சிலர் நடந்துகொள்ளும் முறை குறித்தும் எடுத்துக்கூறினேன். எனினும் இதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற பதவியை விட்டு விலகுவதுடன் கட்சியில் இருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மசூலிப்பட்டினம் எம்.பி. வல்லபனேனி பால சவுரி, கர்னூல் எம்.பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் ஏற்கெனவே பதவி விலகியதுடன் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இவர்களில் வல்லபனேனி பால சவுரி, ஜனசேனா கட்சியில் இணைந்தார். வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் இப்போது மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீ கிருஷ்ணா தேவராயுலு கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சித் தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்