கௌஹாத்தி: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணாமூல் காங்கிரஸ் விளங்குகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள கருத்தை பலர் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றார்.
“பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்று மம்தா கூறியுள்ளார். இண்டியா கூட்டணியை அவர் புறக்கணிக்கவில்லை.
“திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜியும் இண்டியா கூட்டணியின் இரு வலுவான தூண்கள் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அதை அனைவரும் அறிவர்,” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
மேற்கு வங்க மாநிலத்தில் இண்டியா கூட்டணி ஒரே அணியாகத்தான் போட்டியிடும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை உரிய பலன்களைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
“நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது சில வேகத் தடைகள் வரும், சில சிவப்பு விளக்குகளும் எரியும். அப்படியான தருணம் இது. பாஜகவை வீழ்த்த உதவும் எந்த ஒரு வாய்ப்பையும் இண்டியா கூட்டணி நழுவவிடாது,” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

