பெற்ற தாயைப் புறக்கணித்துத் தவிக்கவிட்ட மகன், மகள் மீது வழக்குப்பதிவு; வேலை பறிப்பு

பெற்ற தாயைப் புறக்கணித்துத் தவிக்கவிட்ட மகன், மகள் மீது வழக்குப்பதிவு; வேலை பறிப்பு

2 mins read
c5388ccf-b8c2-4540-96e8-1185201013a7
அன்னக்குட்டி. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: வயதான காலத்தில் பெற்ற தாயை பராமரிக்காததுடன், உயிருக்குப் போராடிய வேளையிலும் அவரைப் பார்க்க ராத மகன், மகளின் அரசுப் பணிகளை கேரள அரசு பறித்துள்ளது.

கேரள மாநிலம், குமுளி அட்டப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்குட்டி. இவருக்கு 55 வயதான ஷஜி என்ற மகனும் 50 வயதான சிஜி என்ற மகளும் உள்ளனர்.

இருவரில் மகன் ஷஜி கேரள வங்கியிலும் மகள் சிஜி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்ட போதிலும் அன்னக்குட்டி சொந்த ஊரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். பிறர் உதவியின்றி நடமாட இயலாத நிலையிலும், பெற்ற மகனோ, மகளோ அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்ளவில்லை.

அன்னக்குட்டியைப் பராமரிக்க யாரையும் நியமிக்கவும் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களாக அன்னக்குட்டி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் உயிருக்குப் போராடிய நிலையில், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதை அறிந்த பிறகும் மகனும் மகளும் அவரைக் காண வரவில்லை.

இதனால் ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் தொடர்பு கொண்ட போதும், தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவளித்துக் கொண்டிருப்பதால் தம்மால் வர இயலாது என்று கூறியுள்ளார் ஷஜி.

இந்நிலையில், அன்னக்குட்டி உயிரிழக்க, மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், காவல்துறையினர் இணைந்து இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு முன்னதாக ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அன்னக்குட்டிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கூட்டத்தோடு கூட்டமாக அவரது மகன் ஷஜி தாயின் உடலை தூரத்தில் இருந்து பார்த்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பெற்ற தாயை தவிக்கவிட்ட ஷஜி, சிஜி ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை அடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவானது. மேலும் இருவரும் பார்த்து வந்த பணியும் பறிக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்