விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

2 mins read
8d2add0b-b995-42f4-903d-9fc4974a1398
விவசாயிகள் போராட்டம். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமான விவசாய அமைப்புகள் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக பாரதிய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடைபெறும் நாளில் விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களுக்குச் செல்லக்கூடாது என்று கூறினார்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம், அழுகிப் போன பயிர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்று ராகேஷ் திகாயத் குற்றஞ்சாட்டினார்.

எனவே, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

“பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தின்போது வணிகர்கள் கடையடைப்பு செய்து விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாத சட்டத்தை நிறைவேற்றுவது அவற்றுள் முதன்மையானது.

“மேலும் வேலையில்லாத் திண்டாட்டம், அக்னிவீர் திட்டம், ஓய்வூதியத் திட்டம் போன்ற கோரிக்கைகளும் அடங்கும். இந்த போராட்டத்தில் மற்ற அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. எனவே இதை விவசாயிகளின் போராட்டமாக மட்டும் மத்திய அரசு கருதிவிடக் கூடாது,” என்றார் ராகேஷ் திகாயத்.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்