புலந்த்சாகர்: இவ்வாண்டு (2024) நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகரில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பௌர்ணமியில் அன்று தொடங்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான ஏற்பாடுகளில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் கலந்துகொள்வர்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ஸ்ரீபால ராமர் கோயில் கடந்த 22ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்பட்ட நிலையில், 25ஆம் தேதி வியாழக்கிழமை பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
மக்களவைத் தேர்தல் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் எனவும் இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து 3வது முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி, அதிக இடங்களில் வெற்றிபெறும் நோக்கில் தனது தேர்தல் பிரச்சாரத்தை புலந்த்சாகரில் தொடங்குகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது, இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

