புதுடெல்லி: ரயில்வே பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியது, கட்டுமானத் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏறக்குறைய ரூ.60 கோடி பணத்தை லஞ்சம் வாங்கியதாக ஏழு ரயில்வே அதிகாரிகள் மீதும் ஒரு தனியார் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் செய்தியாளர் களிடம் கூறுகையில், “வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 2016 முதல் 2023ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திட்டப் பணிகள் தொடர்பாக ரூ.60 கோடி லஞ்சம் தரப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
“அப்போதைய துணை கட்டுமானத் தலைமைப் பொறியாளரான ராம்பால், முதுநிலை கண்காணிப்புப் பொறியாளர்கள் ரிதுராஜ், திராஜ் பகவத், மனோஜ், மிதுன் தாஸ் உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் மீதும் ‘பாரதிய இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.
“அசாம், திரிபுரா, மணிப்பூர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நகரங்களிலும் இந்த அதிகாரிகளுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாக இருந்த 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
“அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாங்கிக் குவித்திருந்த சொத்துகள் பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரூ.60 கோடி லஞ்சம் பெற்ற தகவலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது,” என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

