ஹைதராபாத்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கடவுள் படத்தைக் காட்டி பிரதமர் மோடியால் மக்களின் வயிற்றை நிரப்ப முடியாது என்றார்.
நாட்டில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் நெருக்கடி முற்றி வருகிறது என்றும் மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.
“இத்தகைய சூழலில் பாகிஸ்தான், சீனா என்று காரணங்களை அடுக்கி வருகிறார் பிரதமர் மோடி.
“கடவுள் படத்தைக் காட்டி மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
எனவே, நாட்டு மக்கள் பிரதமரின் பொறியில் விழுந்துவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.
ஏற்கெனவே தேர்தலின்போது அளித்த பல உத்தரவாதங்களை மோடியும் அவரது அரசாங்கமும் நிறைவேற்றவில்லை என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை, நீதித்துறை ஆகியன பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள சுயாட்சி அமைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அழிப்பதற்கு பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அரசியலமைப்பு இல்லையென்றால் ஜனநாயகத்தை நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால் இந்த அமைப்பைச் சிதைத்து பல்வேறு மாற்றங்களைச் செய்ய சில தரப்பினர் முயற்சி செய்கின்றனர். அதை அனுமதிக்கக் கூடாது,” என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

