புதுடெல்லி: இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் கர்தவ்ய பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பைத் தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை நேற்று (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்புறமும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனையும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதன் பின்னர் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. குதிரைப் படை, பீரங்கிப் படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றார். அதன் பின்னர் மற்ற அணிவகுப்புகள் தொடங்கின. அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

