சண்டிகர்: காயமடைந்த ஒற்றைச் சேவலுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்திருக்கும் தகவலும் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்லுவானா என்ற கிராமத்தில் சேவல் சண்டை நடைபெற இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் சேவல்கள் துன்புறுத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றபோது இரண்டு சேவல்கள் மட்டுமே காணப்பட்டன. போட்டியை நடத்த ஏற்பாடுகளைச் செய்தவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், ஒருவர் மட்டுமே பிடிபட்டார்.
காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சேவலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த 11 வெற்றிக்கிண்ணங்களைக் கைப்பற்றியது.
காயமடைந்த சேவல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படும் என்பதால் அதன் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக போலிசார் கருதுகின்றனர்.
எனவே, அதற்கு உணவளித்து பராமரிப்பதுடன் உரிய பாதுகாப்பும் அளித்துள்ளது காவல்துறை.
தொடர்புடைய செய்திகள்
அச்சேவலுக்கு 24 மணிநேரமும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர்.

