தமது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா கட்சி விலைகொடுத்து வாங்க முயற்சி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
தமது அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் பாஜக 25 கோடி ரூபாய் தர முன்வந்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.
பாஜகவில் சேரவில்லை என்றால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்து விடுவோம் என்று பாஜக அந்த ஏழு எம்எல்ஏக்களையும் மிரட்டியதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை நான்கு முறை அழைப்பாணை அனுப்பியது.
ஆயினும், அந்த அழைப்பாணைக்கு அவர் இணங்கவில்லை. தம்மை விசாரணைக்கு அழைப்பது சட்டவிரோதம் என்றும் அரசியல் சதி என்றும் கூறி முன்னிலையாகாமல் அவர் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தமது அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக சனிக்கிழமை தமது சமூகப் பக்கத்தில் நீண்டதொரு பதிவை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
தமது தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பாஜக கடந்த ஒன்பது ஆண்டுகளாக விடாமல் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தம்மைக் கைது செய்தாவது ஆட்சியைக் கவிழ்க்கலாம் என அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்து உள்ளார்.
“இன்னும் சில நாள்களில் கெஜ்ரிவாலைக் கைது செய்துவிடுவோம். அதன் பிறகு எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி செய்வோம். இதுவரை நாங்கள் 21 எம்எல்ஏக்களிடம் பேசி உள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும் பல எம்எல்ஏக்களிடம் பேச உள்ளோம். எம்எல்ஏ ஒவ்வொருவருக்கும் 25 கோடி ரூபாய் தருவதோடு பாஜகவில் இணைந்த பின்னர் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு அளிப்போம்,” என்று பாஜக சார்பில் சிலர் பேசியதாக கெஜ்ரிவால் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், “பாஜகவினர் தொடர்பு கொண்ட 7 எம்எல்ஏக்களும் பேரத்துக்கு உடன்படவில்லை. ஆம்ஆத்மி எல்எல்ஏக்கள் அனைவரும் கட்சிமாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்,” என்று தெரிவித்து உள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்தக் குற்றச்சாட்டால் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

