கூட்டணியிலிருந்து விலகுவார் என்பது எங்களுக்கு முன்னரே தெரியும்: கார்கே

கூட்டணியிலிருந்து விலகுவார் என்பது எங்களுக்கு முன்னரே தெரியும்: கார்கே

2 mins read
545d8e31-33a4-48ce-a83d-a148a1ee3fa3
நிதிஷ் குமார் ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை விட்டு விலகினார். அவரது பதவி விலகல் கடிதத்தை அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டதாகவும் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் அன்று மாலையே மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் “நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியிலிருந்து விலகுவார் என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்,” என காங்கிரஸ் தலைவரும் இண்டியா கூட்டணியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநிலம் கலபுராகியில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்பியிருந்தால் இருந்திருப்பார். ஆனால் அவர் போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேசியபோது, நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளார் என்று கூறினர்,”என்றார் கார்கே.

“தவறான தகவல் பரவி விடக் கூடாது என்பதால் நாங்கள் எதையும் சொல்லவில்லை. இன்று அந்த தகவல் உண்மையாகி விட்டது,” என மேலும் கார்கே தெரிவித்தார்.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், “பாஜகவையும், அதன் கொள்கைகளையும் எதிர்த்து நிதிஷ் குமார் இறுதிவரை போராடுவார் என்று இண்டியா கூட்டணியில் உள்ள அனைவரும் எதிர்பார்த்தோம்,” என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நிதிஷ் குமார் கூட்டணியிலிருந்து விலகியதற்கு காங்கிரசை சாடியுள்ளார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நியாயம் செய்யாமல், அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்காமல் இருந்தால், பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் தாக்கூர்.

குறிப்புச் சொற்கள்