கிஷன்கஞ்ச்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் பீகாருக்குள் நுழைந்தது.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. தற்போது மேற்கு வங்கத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது.
பீகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் பேருந்துக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான இளைஞர்கள் கைகளில் காங்கிரஸ் கொடியை ஏந்தியவாறு பேருந்தோடு உடன் வந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருந்து வந்த நிலையில், அவர் திடீரென ஞாயிற்றுக்கிழமை பாஜக அணிக்குச் சென்றுவிட்டார். அதோடு, இண்டியா கூட்டணி குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த திடீர் அரசியல் திருப்பத்தை அடுத்து, ராகுல் காந்தி பீகாருக்கு வந்துள்ளார்.
கிஷன்கஞ்ச்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்த யாத்திரை எதற்காக என்று பலரும் கேட்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக ஆகியவை சித்தாந்த ரீதியாக வெறுப்பைப் பரப்பி வருகின்றன.
ஒரு சமயம் மற்றொரு சமயத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறது. மக்கள் சமய ரீதியாகவும், மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே, வெறுப்பு சந்தையில் அன்பு எனும் கடையை நாங்கள் திறந்துள்ளோம்.
நாட்டின் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை இந்த யாத்திரை நிகழ்த்தும். நாங்கள் புதிய கண்ணோட்டத்தை, சித்தாந்தத்தை வழங்கி உள்ளோம்,” என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ராகுல் காந்தியோடு வந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அணி மாறுவது நிதிஷ் குமாருக்கு வழக்கமானதுதான்.
“நிதிஷ் குமார் அணி மாறியதன் பின்னணியில் பிரதமர் மோடி இருக்கிறார். தற்போது இந்த யாத்திரைக்கு மக்கள் அளித்து வரும் மிகப் பெரிய வரவேற்பை நீங்களே பார்க்கிறீர்கள். முதுகில் குத்திய நிதிஷ் குமாருக்கு தற்போது கிஷன்கஞ்ச் மக்கள் பதில் அளித்துள்ளார்கள்,” எனத் தெரிவித்தார்.
கிஷன்கஞ்ச் மாவட்டம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாவட்டம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ராகுல் காந்தி பீகாருக்கு வருகை தந்துள்ளார். கிஷன்கஞ்ச் நகரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யாத்திரை செவ்வாய்க்கிழமை புர்னியா நகருக்குச் செல்ல உள்ளது. அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரின் புர்னியா பொதுக்கூட்டத்துக்குப் பிறகு புதன்கிழமை நடைப்பயணம் மீண்டும் மேற்கு வங்கத்துக்குள் நுழைகிறது. அங்கு முர்ஷிதாபாத் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை அடுத்து யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் நுழைகிறது. அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் வழியாக மகாராஷ்டிராவுக்கு வருகிறது.
மகாராஷ்டிராவின் மாலேகான், நாசிக், தானே வழியாக மும்பையில் நடைப்பயணம் நிறைவடைய இருக்கிறது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கிலோ மீட்டர் தொலைவும், 67 நாள்களும் கொண்டது. 15 மாநிலங்கள் வழியாகவும், 110 மாவட்டங்கள் வழியாகவும் இந்த நடைப்பயணம் செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.