இந்தக் கூட்டணி நீடிக்காது: நிதிஷ் பாஜக கூட்டணியில் சேர்ந்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து

இந்தக் கூட்டணி நீடிக்காது: நிதிஷ் பாஜக கூட்டணியில் சேர்ந்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து

1 mins read
ab551dc7-c718-40fe-9d92-2ddd717f66c1
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், “குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது,” என்று தெரிவித்துள்ளார்.

பீகாரின் மெகா கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் இவ்வாறாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், ”பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025ல் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது. அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு - பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும்.

“இந்தக் கூட்டணி பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுத்துபூர்வமாக கூட தருகிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்த 6வது மாதமே அடுத்த மாற்றம் நிகழும். ஏற்கெனவே கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்போதைய காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு மகா கூட்டணி தாங்காது என்று கூறியிருந்தேன். அது நடந்தது. அதேபோல் இப்போதும் சொல்கிறேன், 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக - ஜேடியு கூட்டணி தாக்குப்பிடிக்காது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்