ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் வசிக்கும் ஒரு பெண், மாமியார் தனது அழகு சாதனங்களைப் பயன்படுத்தியதால் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
மால்புரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண்ணும், அவருடைய சகோதரியும் எட்டு மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து கொண்டனர்.
மணவாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் மருமகளின் அனுமதியின்றி அவரது முக அழகுச் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியால் பிரச்சினை வெடித்ததாக தினத்தந்தி நாளேடு கூறியது.
ஏதேனும் நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் மேக்-அப் பொருள்கள் இருக்காது. மாமியார் தீர்த்து வைத்திருப்பார்.
இதனால் மருமகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இந்த நிலையில் நடந்த விவகாரங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து அந்தப் பெண்ணும், அவருடைய சகோதரியும் வீட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இரு மாதங்களாக இருவரும் தாயார் வீட்டில் வசித்துவந்த நிலையில் ஆக்ரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட குடும்ப ஆலோசனை நிலையத்தில் மருமகள் புகார் அளித்தார்.
இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை அன்று மருமகளுக்கும் மாமியாருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாக குடும்ப ஆலோசகரான அமித் கவுர் சொன்னார்.
அப்படியும் விவகாரத்து வேண்டும் என்று மருமகள் பிடிவாதமாக இருப்பதாக அவர் கூறினார்.

