பாஜக பிரமுகர் கொல்லப்பட்டவழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை

பாஜக பிரமுகர் கொல்லப்பட்டவழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை

2 mins read
7ffaf58e-a568-4637-9b81-3919df06b6dc
ரஞ்சித் ஸ்ரீனிவாசன். - படம்: இந்திய ஊடகம்

மாவேலிக்கரா: கேரளா மாநிலத்தில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பிரமுகரான ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மாவேலிக்கரா கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்று இந்து தமிழ் திசை நாளேடு குறிப்பிட்டது.

பாரதிய ஜனதா கட்சியில் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார்.

2021 டிசம்பர் 19ல் ஆலப்புழாவின் வெல்லக்கிணறு பகுதியில் அவரது வீட்டில் அவர் கொல்லப்பட்டார். அவரது தாயார், மனைவி, மகள் முன்பு இந்தப் படுகொலை நடந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாவேலிக்கரா நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி, இந்த அரிய வழக்கில் 15 பேருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன் என்றார்.

நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம் என்ற சல்மான், அப்துல் கலாம், சஃபருதின், மன்ஷத், ஜஸீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகிர், ஹுசைன், ஷாஜி, ஷ்ரேனாஸ் அஷ்ரப் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று அறியப்படுகிறது.

இந்தத் தீர்ப்பை ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொலைக்கு பதிலடியாக ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது.

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் ஷான் கொல்லப்பட்டார்.

2021 பிப்ரவரியில் ஆலப்புழாவில் கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் நந்துகிருஷ்ணா கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஷான் கொல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்