உயிர் பிரியும் தறுவாயிலும் 60க்கு மேற்பட்டோரைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

1 mins read
771e5849-9233-4a15-9d5d-c9227da1e555
சித்திரிப்பு: - பிக்சாபே

பாலாசூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 60க்கு மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம், பாலாசூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) காலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தப் பேருந்து, மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த சுற்றுப்பயணிகளை ஏற்றிக்கொண்டு, பாலாசூர் மாவட்டத்திலுள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சென்றதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அப்போது, அதன் ஓட்டுநர் ஷேக் அக்தருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்படவே அவர் உடனடியாகப் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியதாகப் பயணிகள் கூறினர். பின்னர் அவர்கள் உள்ளூர்வாசிகளை உதவிக்கு அழைத்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஓட்டுநர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தன் உயிர் பிரியும் தறுவாயிலும் சமயோசிதமாகச் செயல்பட்டு, பிறர் உயிரைக் காத்த ஓட்டுநரைப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்