பாஜக, மஜத கட்சிகள் போராட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி

2 mins read
a3ba393d-8947-49d2-9236-d66441ca4603
படம்: - தமிழ்முரசு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டிய இடத்தில் அனுமன் கொடியை இந்து அமைப்பினர் ஏற்றினர். இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதே கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது.

இதனைக் கண்டித்து பாஜக, மஜத, பஜ்ரங் தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அக்கிராமத்தில் புதன்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு, ஷிமோகா ஆகிய இடங்களில் ஆளும் காங்கிரசைக் கண்டித்து பாஜக, மஜத ஆகிய கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டம் ந‌டத்தினர். மண்டியாவில் மஜத மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான‌ எச்.டி.குமாரசாமி தலைமையில் இரு கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘‘முதல்வர் சித்தராமையா இந்துக்களை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கெரகோடு கிராமத்தினர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுமன் கொடியை ஏற்றியுள்ளனர். அதனை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக சித்தராமையா அதனை அகற்ற உத்தரவிட்டார்,’‘ என ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் திரு குமாரசாமி தெரிவித்தார்.

‘‘குமாரசாமிக்கு கொள்கை கோட்பாடு எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஜனதா தளம் என கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு அவர் காவி துண்டு அணிந்துகொண்டு போராட்டம் நடத்தியுள்ளார். அதனை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். காங்கிரஸ், ஹனுமனுக்கு எதிரான கட்சி அல்ல. நாங்களே ஹனுமன் பக்தர்கள் தான்,’‘எனக் குமாரசாமியைச் சாடினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

குறிப்புச் சொற்கள்