பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் கைகலப்பு: இருவர் உயிரிழப்பு

பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் கைகலப்பு: இருவர் உயிரிழப்பு

1 mins read
8d1d02ad-e3de-487d-81dc-47a1d246bbde
பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் காட்சி. - படம்: ஊடகம்

குருகிராம்: அரியானாவின் குருகிராம் நகரிலுள்ள பலியாவாஸ் கிராமத்தில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், டெல்லியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 மாணவர்கள் வரை கலந்து கொண்டனர். அப்போது, கார்களை நிறுத்துவதில் அம்மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறாக ஆரம்பித்தது பின்னர் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

அவர்களைத் தடுப்பதற்காக பண்ணை இல்ல உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் குமாரும் அவருடைய உதவியாளர்களும் சென்றனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தாக்கினர்.

இத்தாக்குதலில் பண்ணை இல்ல உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று, பலத்த காயமடைந்த கஜேந்திரா என்ற மாணவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்
விருந்துஉயிரிழப்பு