ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த சண்டையில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் அதிரடிப் படையைச் சேர்ந்தவர். மேலும் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
சுக்மா - பிஜாப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் 2021ஆம் ஆண்டில் மட்டும் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் மாவோயிஸ்டுகளுடன் ஆன மோதலில் கொல்லப்பட்டனர். அதே இடத்தில்தான் இப்போதும் தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சுக்மா - பிஜாப்பூர் பகுதியில் முதன்முறையாக குடியரசு தின விழாவை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு இடையே மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த அப்பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை (ஜனவரி 30) ஜோனாகுடா - அலிகுடா பகுதியில் அதிரடிப் படையினரும் சிஆர்பிஎஃப் சிறப்பு அதிரடிப் படையினரும் கூட்டாக இணைந்து மாவோயிஸ்ட்டுகளைத் துடைத்தொழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தி மூன்று வீரர்களைக் கொன்றனர்.
அதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால், மாவோயிஸ்டுகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த மூன்று வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தேவன்.சி, பவன் குமார், லம்ப்தார் சின்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2024 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது அவர், “மூன்று ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒடுக்கப்படும்,” என்று சூளுரைத்திருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. மாவோயிஸ்டுகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
சுக்மா - பிஜப்பூர் பகுதியில் ஜகர்குண்டா மலை அருகே பாதுகாப்புப் படையினர் புதிதாக அமைத்துள்ள முகாம் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து பாதுகாப்புப் படையினரின் முகாம்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

