லக்னோ: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், சமாஜ்வாடி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களையும் ஆர்எல்டி கட்சிக்கு 7 இடங்களையும் பிற கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளையும் சமாஜ்வாடி கட்சி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதில் 16 வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். இது அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் தொகுதியாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டில் முலாயம் சிங் உயிரிழந்தார். அதனையடுத்து மெயின்புரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியிட்டு 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜுக்கு 3.29 லட்சம் வாக்குகளே கிடைத்தன.
அகிலேஷ் யாதவின் உறவினர் தர்மேந்திர யாதவுக்கு பதாவுன் தொகுதியும் மற்றொரு உறவினர் அக்சய் யாதவுக்கு பெரோஷாபாத் தொகுதியும் அளிக்கப்பட்டுள்ளது. போஜ்புரி மொழித் திரைப்பட நடிகை கஜோல் நிஷாத் என்பவருக்கு கோரக்பூர் தொகுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பல், ஏட்டா, கெரி, தௌராஹ்ரா, பரூக்காபாத், அக்பூர், பாண்டா, ஃபைசாபாத், அம்பேத்கர் நகர் ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.