ராஞ்சி: நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்டால், அடுத்த முதல்வராக அவரது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் ரூ.600 கோடி நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஜனவரி 27 முதல் 31 ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. எனினும், அந்தக் கடிதத்துக்கு சோரன் தரப்பில் எந்தவிதப் பதிலும் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
அதையடுத்து, டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த 29ஆம் தேதி மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில், அவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் ரொக்கத்தையும் முதல் அமைச்சருக்குச் சொந்தமான இரண்டு பி.எம்.டபிள்யூ. கார்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் மீண்டும் ஜார்க்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரனிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தவுள்ளது.
அந்த விசாரணைக்குப் பின், அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவர் கைது செய்யப்பட்டால், அடுத்த முதல் அமைச்சராக சோரனின் மனைவி கல்பனா சோரன் பதவியேற்கலாம் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.
தொடர்புடைய செய்திகள்
ஆளும் கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில் சோரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சூழலில், அரசை பாதுகாப்பதே முக்கியம் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி, காங்கிரசை சேர்ந்த மாநில சுகாதார அமைச்சரான பன்னா குப்தா கூறும்போது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் அனைவரும் முதல் அமைச்சரை முழு அளவில் ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
எனினும், சோரனின் மனைவி பதவியேற்பதற்கு சட்டரீதியிலான தடங்கல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. வருகிற நவம்பரில் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழலில், கல்பனா சட்டமன்ற உறுப்பினராவது கடினம் என கூறப்படுகிறது.

