10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்கின்றனர்: முர்மு

10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்கின்றனர்: முர்மு

2 mins read
நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்தார் அதிபர் திரௌபதி முர்மு
5e9a379c-70fa-4284-a38b-548ada8047c5
நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டம் தொடங்குவதற்குமுன் தனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட அதிபர் திரௌபதி முர்மு. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக அதிபர் திரௌபதி முர்மு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குதிரைப்படை சூழ அழைத்து வரப்பட்டார். 

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை ஏந்தியபடி அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டுக்குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட 1.15 மணி நேரம் அவர் உரையாற்றினார். வியாழக்கிழமை இடைக்கால வரவு- செலவு கணக்குத் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் புதன்கிழமை கூடியது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல்முறையாக அதிபர் திரௌபதி முர்மு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இது எனது முதல் உரை. “இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் சாராம்சத்தை அடிப்படையாக கொண்டது,” எனக் கூறி தன் உரையைத் தொடங்கினார் முர்மு.

“இக்கட்டடத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என நான் நம்புகிறேன்,” என்றார்.

“இந்தியாவின் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜிஎஸ்டி வரி மூலம் ஒரே நாடு, ஒரே வரி சட்டம் கிடைத்தது.

“நமது அந்நியச் செலவாணி கையிருப்பு 600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. உலகிலேயே கைப்பேசி தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூபாய் ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. “ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான நுழைவுச் சீட்டு.

10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர்.

“கடந்த சில ஆண்டுகளில் நாடு, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

“10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

“வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மக்கள் மருந்தகத்தின் மூலம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது,” என மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

குறிப்புச் சொற்கள்