கன்னடத்தில் பெயர்ப் பலகை: அவசர சட்டத்தை ஆளுநர் நிராகரித்ததால் கர்நாடகாவில் கொந்தளிப்பு

கன்னடத்தில் பெயர்ப் பலகை: அவசர சட்டத்தை ஆளுநர் நிராகரித்ததால் கர்நாடகாவில் கொந்தளிப்பு

2 mins read
ae04fd3e-e719-498f-a023-d243dc293d89
கர்நாடக மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகளின் பெயர்ப் பலகையில் 60 விழுக்காடு க‌ன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதையடுத்து, கர்நாடக அரசு கடந்த ஜனவரி 5ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60 விழுக்காடு கன்னட எழுத்தில் இருக்க வேண்டும் என்று அவசரச் சட்டம் பிறப்பித்தது.

இதைக் கன்னட அமைப்பினர், இலக்கியவாதிகள், மாநில அரசியல்வாதிகள் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

மேலும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கன்னட மொழியில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், கர்நாடக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு அங்குள்ள ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் தர மறுத்து நிராகரித்து முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும், இதை சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் கன்னட அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “கர்நாடகாவின் முதன்மையான பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் தவறான முடிவை எடுத்துள்ளார். இது துரதிருஷ்டமான முடிவு.

“இந்தப் பிரச்சினை கர்நாடகாவின் கௌரவம் சார்ந்தது என்பதால் ஆளுநர் தன‌து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் மாநில அரசின் இந்த அவசர சட்டத்தை நிராகரிப்பதற்கான வழி ஒன்றுமில்லை. இது முற்போக்கான அவசர சட்டம்தான். இதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தால்தான் இந்த அவசர சட்டத்துக்குப் பதிலாக மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்,” என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தராவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 2023 டிசம்பரில் கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அடித்து நொறுக்கி தார்பூசி அழித்தனர். இதனால் பெங்களூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து கன்னட மொழியில் வர்த்தக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகளை மாற்றுவதற்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெங்களூர் மாநகராட்சி கெடு விதித்து உத்தரவிட்டது.

இப்போது அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிராகரித்திருப்பது கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தாவர்சந்த்தின் இந்தப் போக்கால் கர்நாடகாவில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்