5வது அழைப்பாணையையும் புறக்கணிக்கும் கெஜ்ரிவால்; அரசை கவிழ்ப்பதே மோடியின் நோக்கம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

2 mins read
41e31c94-d866-4826-9349-d0c4fa7014c6
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஜனவரி 2ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) விசாரணைக்கு முன்னிலையாக மாட்டார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 3வது முறையாக அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பி இருந்தது. அழைப்பாணையை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக அழைப்பாணை அனுப்புவது சட்டவிரோதம். இந்த அழைப்பாணையை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னதாக 4வது முறையாக அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் முன்னிலையாகாத நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் கட்சி தரப்பில் அஞ்சப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை 5வது முறையாக அழைப்பாணை அனுப்பியது அமலாக்கத்துறை.

அந்த அழைப்பாணையில் பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாக மாட்டார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 18ஆம் தேதிகளுக்கான அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்