புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியினரின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்ததும், பாஜகவினர் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்களைத் தடுக்க முயற்சி செய்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தடுப்புகளை தள்ளிவிட்டு அவர்கள் ஆம்ஆத்மி அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு எதிராக பாஜக தலைமையகத்துக்கு வெளியே 11 மணிக்கு ஆம் ஆத்மி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சியினர் வருகை தருவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியினரின் டுவீட்டை தனது எக்ஸ் தளத்தில் ரீடுவீட் செய்து வருகிறார். அதில், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இங்கு என்ன நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இரு கட்சிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் அருகே தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

