புதுடெல்லி: ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம் கட்சியின் புதிய சட்டமன்ற குழுத் தலைவர் சுமார் 20 மணி நேரம் காத்திருந்த பிறகே ஆளுநரை சந்திக்க முடிந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் இருந்தபோதிலும் அவர் உடனே ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. ஆனால் பீகாரில் நிதிஷ் குமாரின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, 12 மணி நேரத்தில் அங்கு புதிய அரசு பதவியேற்றுள்ளது. பீகாரில் நடந்தது ஏன் ஜார்க்கண்டில் நடக்கவில்லை? இது வெட்கக்கேடானது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வரவுசெலவுக் கூட்டத் தொடரின் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ஜார்க்கண்ட் விவகாரத்தை எழுப்பினார்.
இதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுந்து, “மிகப்பெரிய நில மோசடியை ஜார்க்கண்ட் மாநிலம் கண்டது. இதுவே ஹேமந்த் சோரனின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது,” என்றார்.
இதை ஏற்காத காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “ஏன் அந்த மாநிலம் தலைமை இல்லாமல் இருந்தது? ஏன் அங்கு இடைக்கால ஏற்பாடு செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். அதன் பிறகு அவர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பாரத் ராஷ்டிர சமிதி கேசவ ராவ் பேசும்போது, “எல்லா நேரங்களிலும் ஒரு அரசு இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் வழி இயங்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த சோரன் புதன்கிழமை இரவு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை மேலும் 5 நாட்களுக்கு ராஞ்சி சிறப்பு நீதி மன்றம் நீட்டித்தது.

