புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு வரும்படி டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
குற்றப்பிரிவு குழு கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்றதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
குற்றப்பிரிவு அதிகாரிகளின் அழைப்பாணையை ஏற்று அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அழைப்பாணை வழங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் அதிஷி வீடுகளுக்கு குற்றப் பிரிவு குழு வெள்ளிக்கிழமை சென்றது. ஆனால் அந்த இரண்டு தலைவர்களும் அழைப்பாணையை ஏற்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை குழு மீண்டும் சனிக்கிழமை அவர்களின் வீடுகளுக்குச் சென்றது.
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும், அணி மாறுவதற்கு அவர்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்குவதாக பாஜக கூறியதாகவும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
டெல்லி அமைச்சர் அதிஷியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான பாஜக குழு ஜனவரி 30ஆம் தேதி டெல்லி காவல்துறை தலைவரைச் சந்தித்து புகார் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

