புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
96 வயதான அத்வானி, துணைப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
“ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.” என்று திரு மோடி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் பதிவிட்டார்.
“அத்வானி அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்ட தொண்டனாகத் தொடங்கி நமது நாட்டின் துணைப் பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன” என்றும் மோடி குறிப்பிட்டார்.
கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

