பெங்களூரு: உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களைப் பற்றி நெதர்லாந்தைச் சேர்ந்த ‘டாம் டாம்’ என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.
2023ஆம் ஆண்டுக்கான ஆய்வுப் பட்டியலில், இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களூரு உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரங்களில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வின் வழி, பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், ஓர் ஆண்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 132 மணி நேரத்தைக் கழிப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்திலும் அயர்லாந்து தலைநகர் டப்ளின் இரண்டாவது இடத்திலும் கனடா தலைநகர் டொரண்டோ 3வது இடத்திலும் இத்தாலியின் மிலான் நகரம் 4வது இடத்திலும் பெரு தலைநகர் லிமா 5வது இடத்திலும் உள்ளன.

