புகுந்த வீட்டிற்கு மகளை ஹெலிகாப்டரில் அனுப்பிய பாசக்காரத் தந்தை

புகுந்த வீட்டிற்கு மகளை ஹெலிகாப்டரில் அனுப்பிய பாசக்காரத் தந்தை

படம்: இந்திய ஊடகம்

04 Feb 2024 - 5:00 pm

1 mins read

பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் தந்தை ஒருவர் தனது ஐஏஎஸ் மகளை ஐபிஎஸ் மருமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பரத்பூரில் இருக்கும் தௌரமுய் நகரில் வசிக்கும் அமர்சிங்கும் அவரது மனைவி நீதன் சிங்கும் அப்பகுதியில் தனியார் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் மருத்துவர்கள். தன் மகள் அபராஜிதா ஐஏஎஸ்க்குத் தேர்வானதும், ஹெலிகாப்டரில் அவருக்கு விடைகொடுக்க வேண்டும் என அமர்சிங் ஆசைப்பட்டார்.

சில சூழ்நிலையின் காரணமாக அது நிறைவேறாமல் போக, தன் மகளின் திருமணத்திலாவது அவரை ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்க வேண்டும் என எதிர்பார்த்தார்.

இந்நிலையில், தனியார் உணவகத்தில் திருமண விழாவை முடித்துக்கொண்டு பிரியாவிடையின்போது மகளை அவருடைய கணவருடன் ஹெலிகாப்டரில் அனுப்பி தமது கனவை நிறைவேற்றிக்கொண்டார் திரு அமர்சிங்.

இந்தக் காட்சியை அங்கிருந்த இளையர்கள் பலர் தங்கள் கைப்பேசியில் காணொளியாக எடுத்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

குறிப்புச் சொற்கள்