கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் பயணமாக கவுகாத்திக்கு சனிக்கிழமை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கானாபரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திறந்த ஜீப்பில் அழைத்து செல்லப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ரூ.498 கோடி மதிப்பில் காமாக்யா கோவில் நடைபாதை, ரூ.358 கோடி செலவில் கவுகாத்தி புதிய விமான நிலைய முனையத்திலிருந்து ஆறு வழிச்சாலை, ரூ.98 கோடி மதிப்பில் நேரு விளையாட்டு அரங்கத்தை ஃபிஃபா தரத்திற்கு மேம்படுத்துதல், ரூ.300 கோடி செலவில் சந்திராபூரில் புதிய விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர், அங்கு திரண்டிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார்.
“கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து மறைப்பதன் மூலம் வளர்ச்சி அடைய முடியாது,” என்றார் மோடி.
“நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்,” என அவர் மேலும் எடுத்துரைத்தார்.
“வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான நிலையங்களாக அசாம் மாறி உள்ளது.10 ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளனர்,” என மோடி தெரிவித்தார்.

