லாஸ் ஏஞ்சலிஸ்: சங்கர் மகாதேவன் மற்றும் ஸாக்கிர் ஹுசேனின் ‘சக்தி பேண்ட்’ இசை விருதுகளில் உயரிய விருதுக்கான கிராமி விருதை வென்றது. குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் கிராமி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இதன், 66வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பிரம்மாண்டமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இந்தியாவின் ஸாக்கிர் ஹுசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் ஃபியூஷன் இசைக் குழுவான சக்தி இசைக்குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதுகள் வென்றனர் ஸாக்கிர் ஹுசேன் மற்றும் சங்கர் மகாதேவன் அடங்கிய சக்தி குழு. இவர்களின் அண்மைய இசை ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதைப் பெற்றது.
சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஸாக்கிர் ஹுசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. சங்கர் மகாதேவன், ஸாக்கிர் ஹுசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.
விருதுக்கு பின் பேசிய சங்கர் மகாதேவன் “கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. நாங்கள் இந்தியாவை நினைத்து பெருமை கொள்கிறோம். எனது மனைவிக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார். அவர் விருதுக்கு நன்றி தெரிவிக்கும் காணொளிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது,” என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

