கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்.பி. ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்.பி. ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

3 mins read
f5f0d997-ec27-4357-9127-5dd734dfb013
அதிஷி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர், கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஆகியோரது வீடுகளில் செவ்வாய்க்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

டெல்லி மதுபானக் கொள்கை பணமோசடி முறைகேடு வழக்குத் தொடர்பில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் தங்களுக்கான பிணை கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பட்டியலில் தன்னையும் சேர்ப்பதற்கு பாஜக துடிப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.

நவம்பர் 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை ஐந்து முறை கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணைகளை அனுப்பியது அமலாக்கத்துறை.

ஆனால், ஒரு முறை கூட கெஜ்ரிவால் முன்னிலையாகவில்லை.

தனக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கமுடையவை என்றும் சட்ட விரோதமானவை என்றும் கெஜ்ரிவால் சாடி வந்தார்.

அழைப்பாணைக்கு உடன்பட்டு முன்னிலையானால் அடுத்தகட்ட நடவடிக்கையாக தான் கைது செய்யப்படுவோம் என்பதால் முன்னிலையாவதை கெஜ்ரிவால் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திட்டமிட்டு அழைப்பாணைகளைத் தவிர்த்து வரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்ற உதவியை அமலாக்கத்துறை நாடியது.

இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கை இன்று புதன்கிழமை விசாரிக்க உள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என்.டி.குப்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலர் பிபவ் குமார் ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி ஜல் போர்டு பணமோசடி வழக்குத் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் டெல்லி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது.

“சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு அழைப்பாணை கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட அமலாக்கத்துறையால் ஒரு ரூபாயைக் கூட பறிமுதல் செய்ய முடியவில்லை.

“ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை கேட்டுக்கொண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் அமலாக்கத்துறையால் ஓர் உறுதியான ஆதாரத்தைக்கூட கண்டுபிடிக்கவில்லை.

“அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழங்கிய அறிக்கை மாறியிருந்தது. காணொளி ஆதாரங்கள் வழங்கப்பட்டன, ஆனால், அதில் ஒலி நீக்கப்பட்டிருந்தது.

“ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

“ஆம் ஆத்மி தலைவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபானக் கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தி மிரட்டுகிறது.

“மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால், நாங்கள் இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்