‘வந்தே பாரத்’திற்கு வந்தது கரப்பான்பூச்சி!

1 mins read
3d7bb934-1800-4625-abd2-a08bdb80975f
ரயிலில் தமக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் குறைகூறியுள்ளார். - படம்: டாக்டர் சுபேந்து கேசரி / எக்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது தமக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகப் பயணி ஒருவர் குறைகூறியுள்ளார்.

இச்சம்பவம் இம்மாதம் ஒன்றாம் தேதியன்று, மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து ஜபல்பூர் சென்ற வந்தே பாரத் ரயிலில் நிகழ்ந்தது.

டாக்டர் ‌சுபேந்து கேசரி எனும் பயணி, இந்திய ரயில்வே உணவு, சுற்றுப்பயணக் கழகம் (ஐஆர்சிடிசி) வழங்கிய உணவில் கரப்பான்பூச்சியைக் கண்டார்.

அந்த உணவைப் படமெடுத்து, அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார். மோசமான உணவுத்தரம் குறித்து ஜபல்பூர் நிலையத்தில் தான் அளித்த புகாரையும் படமெடுத்து, அவர் பதிவேற்றம் செய்தார்.

அதற்கு இணையத்தில் கருத்து தெரிவித்த பலர் இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, நிகழ்ந்த சம்பவத்திற்காக ஐஆர்சிடிசி அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

கரப்பான்பூச்சி இருந்த உணவு வழங்கிய சேவை வழங்குநருக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

இதற்கிடையே, ரயில்வே சேவை அமைப்பு பயணியின் எக்ஸ் பதிவுக்குப் பதிலளித்தது.

“உங்கள் புகார் ரயில் உதவித் தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புகார் எண் குறுஞ்செய்தி வழியாக உங்களின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று ரயில்வே சேவை அமைப்பு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்