‘விபத்தில் என் மனைவி உயிரிழக்க நான்தான் காரணம்’: தன் மீதே புகார் கொடுத்த கணவன்

1 mins read
44174248-ec4d-4242-ba7a-b72bec319a9a
மனைவியை இழந்த துக்கம் தாளாத கணவர் தன் மீது புகார் அளித்தார். - படம்: பிக்சாபே

நாய் மீது மோதக்கூடாது என்பதற்காக காரை வேறு திசையில் திருப்பி, அதனால் தன் மனைவியை இழந்த ஆடவர், தன் மீதே புகார் அளித்த சம்பவம் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஆசிரியராகப் பணிபுரியும் 55 வயது பரேஷ் தோஷி, தன் மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரெனச் சாலை குறுக்கே ஒரு நாய் வந்தது.

நாய் மீது மோதுவதைத் தவிர்க்க, காரை தோஷி திருப்ப முயன்றார். ஆனால், சாலையோரத்தில் இருந்த தற்காலிகத் தூண்கள் மீதும் சாலைத் தடுப்புகள் மீதும் கார் மோதியது.

தடுப்புகளில் ஒன்று கார் சன்னலை உடைத்துச் சென்று தோஷியின் மனைவி அமிதா அவரது இருக்கையிலிருந்து வெளியேற முடியாதபடி இறுக்கி வைத்ததுடன் அவருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டன.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமிதா இறந்துவிட்டார்.

இந்த வேதனைச் சம்பவத்திற்குப் பின், தனக்கு எதிராக தோஷி ‘எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து கொண்டார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாக தன் மீதே அவர் புகார் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
குஜராத்விபத்துபுகார்உயிரிழப்பு