புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் செவ்வாய்க் கிழமை திமுக - பாஜக வாக்குவாதம் அனல் பறந்தது. வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாஜக - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வார்த்தைப் போர் வலுத்தது.
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக பல முறை கேள்வி எழுப்பியும் அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறது என்று மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் குறுக்கிட முயன்றார். அதற்கு டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள். அமருங்கள். நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். அமைச்சராக இருக்கவும் தகுதியில்லாதவர்” என்று ஆவேசமாகப் பேசினார். உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
அவருடைய இந்தப் பேச்சு ஆளுங்கட்சியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் வாக்குவாதம், மன்னிப்பு கேளுங்கள் என்ற கோஷம், வெளிநடப்பு என அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ இது ரொம்ப வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறை சார்ந்த ஒரு கேள்விக்குப் பதிலளிக்கிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து “அன்ஃபிட்” என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார்.
மத்திய இணை அமைச்சர் முருகனிடம், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிநிதியாக மத்திய அமைச்சராக இருக்கிறேன். வெள்ள பாதிப்பு குறித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார். இதனால் அவையில் குறுக்கிட்டு தவறான தகவல்களை கூறாதீர்கள் என்று தெரிவித்தேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை அன்ஃபிட் என்று தெரிவித்தார்,” என்று கூறியுள்ளார்.

