புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக அந்த அரசின் பத்தாண்டுக் கால ஆட்சி குறித்து கறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
அந்தக் கறுப்பு அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. அப்போது பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் கறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் எப்போது பேசினாலும் அந்தப் பேச்சு அந்த அரசின் தோல்விகளை மறைப்பதாகவே உள்ளது.
அத்துடன் மத்திய அரசின் தோல்வி குறித்து கேள்வியெழுப்பினால், அதற்கு ஆளும் கட்சியினர் முக்கியத்துவம் தருவதில்லை. அதனால்தான் இப்போது இந்தக் கறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக் கூறுகிறோம்.
மோடியின் பாஜக அரசால் நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 411 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளைக் கவிழ்த்து ஜனநாயகத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிறார்கள்,” என்றார்.
பாஜகவின் ஜெயந்த் சின்ஹா
பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெயந்த் சின்ஹா புதன்கிழமை கூறுகையில், “நடப்பு வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள வெள்ளை அறிக்கை பிரதமர் மோடி இந்தியாவில் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டுக்கு முன்பு, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு ஆட்சியை விட்டுப் போகும் போது இந்தியாவின் பொருளாதார நிலை எவ்வளவு மோசமாக இருந்தது, மோடி தலைமையிலான அரசு அதில் எவ்வாறு நேர்மறையான மாற்றத்தினை கொண்டுவந்தது என்பதை எடுத்துக்காட்டும்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமான ஐந்தில் ஒன்றாக இருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 5 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தது. பணவீக்கம் 10 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி, 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது அவர், காங்கிரஸின் 10 ஆண்டுக் கால ஆட்சியையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் பத்தாண்டுக் கால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, மோடி ஆட்சியின் தோல்விகள் குறித்து இந்தக் கறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

