புதுடெல்லி: கர்நாடகாவுக்கு உரிய வரிப் பகிர்வை மத்திய அரசு வழங்கவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
வரி வருவாயைப் பொறுத்தவரை நாட்டிலேயே கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ள போதிலும், கர்நாடகாவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று அவர் டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குறிப்பிட்டார்.
மத்திய அரசு தனது நிதித் தொகுப்பில் இருந்து கர்நாடகாவுக்கு உரிய பங்கை தர மறுப்பதாக அம்மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது. எனவே, கர்நாடகாவுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தி, டெல்லியில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதில் கர்நாடக மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, ஜிஎஸ்டியைப் பொறுத்த வரையில், கர்நாடகாவுக்கு உரிய வரிப் பகிர்வு வழங்கப்படுவதில்லை என மத்திய அரசை சாடினார்.
“இந்த ஆண்டு கர்நாடகா ரூ. 4.30 லட்சம் கோடியை வரியாக வழங்கி இருக்கிறது. கர்நாடக அரசு நூறு ரூபாய் வரியை வசூலித்து மத்திய அரசிடம் கொடுத்தால், மாநில அரசுக்கு ரூ. 12-13 வரை மட்டுமே திருப்பி தரப்படுகிறது.
“இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. கர்நாடகாவுக்கு பத்ரா திட்டத்துக்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை. வறட்சி நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை,” என்றார் முதல்வர் சித்தராமையா.
மாநில நலனையும் கர்நாடக மக்களையும் பாதுகாக்கவே டெல்லியில் போராட்டம் நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் இங்கு நடத்தும் போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறோம். மத்திய அரசு, கர்நாடகாவுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு உரிய நிதியை வழங்காவிட்டால், மக்களிடம் முறையிடுவோம்,” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

