தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் சந்திரபாபு நாயுடு

2 mins read
663da3d9-b81d-48c0-bb6c-b767bf45a161
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. - படம்: இந்திய ஊடகம்

அமராவதி: ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி மீண்டும் அமையலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிப்ரவரி 7ஆம் தேதியன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் ஆந்திர அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

ஜெகன்மோகன் ரெட்டி, யாருடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணுடன் இம்முறை கூட்டணி என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜனசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

இதனால் இம்முறை தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆந்திராவில் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும் முதல்வர் ஜெகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், பிற கட்சிகளுக்கு சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் தங்கள் தாய் கட்சியில் இணைய முன்வருகின்றனர்.

இதனால் இம்முறை ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் ஓட்டுகள் காங்கிரசுக்கு பிரியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தெலுங்கு தேசம் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்று எடுத்த ஆய்வில் 2024 மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்