கூட்டாட்சியை அழிக்க முயல்கிறது பாஜக: பினராயி விஜயன்

கூட்டாட்சியை அழிக்க முயல்கிறது பாஜக: பினராயி விஜயன்

2 mins read
f15be126-63ca-4584-ae99-0b86dadea9fd
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி முறையை அழிக்கவே மத்திய அரசுதான் முயன்று வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: மத்திய அரசு கூட்டாட்சி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசின் இந்தப் போக்கு இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே ஆட்டம் காண வைக்கும்,” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த வியாழக்கிழமை டெல்லியில் நடந்த போராட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசின் அணுகுமுறை உட்பட கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வியாழக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா மற்றும் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உரையாற்றினார். அப்போது, “நாங்கள் வடக்கு–தெற்குப் பிரிவை ஏற்படுத்துவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி முறையை அழிக்கவே மத்திய அரசுதான் முயன்று வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது.

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. நிதிப் பகிர்வில் நியாயமற்று செயல்படுகிறது. மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற நாடாக மாறுகிறது என்பதற்கும் உதாரணம் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்

குறிப்புச் சொற்கள்