தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணப்பெட்டி என வாக்குப்பதிவு இயந்திரத்தை களவாடிய திருடர்கள்; அதிகாரிகள் இடைநீக்கம்

1 mins read
23e663ad-542f-4eb0-ba7d-ee11c6ac5b4e
மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் சாஸ்வத் வட்ட அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரப் பெட்டியை திருடர்கள் பணப்பெட்டி என்று நினைத்து திருடிச் சென்றுவிட்டனர். கண்காணிப்புக் கருவிப் பதிவில் அவர்கள் சிக்கினர். - படம்: ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கருகே வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கக் கூட்டத்திற்காக வாக்குப் பதிவு இயந்திரப் பெட்டி ஒன்று சாஸ்வத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையால் அலுவலகம் மூடிக் கிடந்தது. அங்கு கைவரிசையைக் காட்ட வந்த கள்வர்கள், ஓர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பெட்டி இருப்பதைக் கண்டனர். அந்தப் பெட்டியை அவர்களால் திறக்க முடியவில்லை.

ஆனால், அந்தப் பெட்டிக்குள் பணம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அதையடுத்து ,அந்தப் பெட்டியை அவர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் அலுவலகம் திறக்கப்பட்டதும் வாக்குப்பதிவு இயந்திரம் களவு போய்விட்டதை அறிந்து அதிகாரிகள் திடுக்கிட்டனர் உடனடியாக அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளை ஆய்வுசெய்ததில், திருடர்கள் இரண்டு பேரும் வசமாக சிக்கினர். இதன் அடிப்படையில் சிவாஜி பாந்த்கர், அஜிங்கியா சலுங்கே என்ற இருவரையும் காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் வாக்கு இயந்திரப் பெட்டியைத் திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டனர். பணப்பெட்டி என நினைத்து அதை எடுத்துச் சென்றதாகக் கூறினர். பிறகு அவர்களால் தூக்கி வீசப்பட்ட அந்தப் பெட்டியை காவல்துறை கைப்பற்றியது. இந்தத் திருட்டில் அவர்களுடன் இன்னொருவர் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மூன்றாவது ஆடவரை காவல்துறை வலைபோட்டுத் தேடி வருகிறது.

இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்