புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த வேளாண் அறிவியல் அறிஞரான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டார்.
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது இம்மூவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சவாலான காலங்களில் இந்திய விவசாயத்துக்கு உதவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும், மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிவித்தார்.
டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வளமையையும் உறுதிசெய்துள்ளது என்று மோடி பாராட்டியுள்ளார்.
பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் தமது 98வது வயதில் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார்.

