பல கோடி மக்கள் வாக்களிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக 75 ஆண்டுகள் பழைமையான மைசூரு தொழிற்சாலையில் அழியாத மை தயாரிக்கும் பணி தொடங்கியது.
அழியாத மை தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவிலேயே மைசூருவில் மட்டும்தான் இயங்கி வருகிறது. மைசூரு பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிடட் என்ற அந்த நிறுவனம் கர்நாடக அரசின் கீழ் இயங்கி வருகிறது.
மை தயாரிக்கும் பணி 1962ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஏழு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த நிறுவனம்தான், இன்றுவரை ஒரே ஒரு நிறுவனமாக மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.பெயிண்ட், வார்னிஷ்களும் அங்கு தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் இந்த நிறுவனத்துக்கு வரும் உத்தரவைப் பொறுத்து மை தயாரிக்கும் பணி தொடங்கும்.
வழக்கமாக 10 மில்லி லிட்டர் கொண்ட பிளாஸ்டிக் குப்பிகளில்தான் மை தயாரிக்கப்படுகிறது. ஒரு குப்பி மையைக் கொண்டு 700 வாக்காளர்களின் கைகளில் மை தடவ முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறப்பு ரசாயனத்தின் கூட்டுக்கலவையே இந்த மை என்றும், இது வெகுநாள்கள் நீடிக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
ஏறக்குறைய வெளிநாடுகளிலிருந்தும் அழியாத மை தயாரிக்கும் ஆணைகள் பெறுவதும் வழக்கம். கடந்த 2021ல் மட்டும் ரூ.8.14 கோடி மதிப்பிலான அழியாத மை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

