ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அந்தக் கைது நடவடிக்கையில் ஆளுநர் மாளிகைக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி 31ஆம் தேதி 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட பின் ஹேமந்த் சோரன், நான் கைது செய்யப்பட்டது மத்திய அரசின் சதி. அதற்கு ஆளுநர் மாளிகை உடந்தை. இந்தக் கைது நடவடிக்கையில் ஆளுநருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ராதாகிருஷ்ணன், “ஆளுநர் மாளிகையை தவறாகப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஜனநாயக சட்ட விதிமுறைகளை நாங்கள் சரிவரக் கடைப்பிடித்து வருகிறோம். அமலாக்கத்துறையின் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு முன்பே தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது கடிதத்தில் கூறியுள்ளார். அப்படியிருக்க அவரது கைது நடவடிக்கையில் ஆளுநர் மாளிக்கைக்கு எப்படிப் பங்கு இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அவரை ஆளுநர் மாளிகை ஒருபோதும் முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு தெரிவிக்கவில்லை. அவரது முதல்வர் அலுவலகமே, ஹேமந்த் சில ஆவணங்களை முதல்வர் அலுவலகத்தில் வைக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது.
சொல்லப்போனால் அமலாக்கத்துறை அதிகாரிகளை எனக்குத் தெரியாது. அவர்களை ஒருசில நிமிடம் பார்த்திருப்பேன். இப்போது அவர்களைக் காட்டினால்கூட எனக்கு அடையாளம் தெரியாது என்று ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“உங்கள் முதல்வரைக் காவலில் எடுத்து விசாரிக்கப்போகிறோம். எனவே, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான சட்டபூர்வ கடமைகளை முடிப்பதற்கு கோரிக்கை வைத்துள்ளார். எனவே, அவருடைய பதவி விலகல் கடைமைகளை முடிப்பதற்காக ஆளுநர் மாளிகைக்கு வருகிறோம்,” என்று அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து ஆளுநர் மாளிகையின் முதன்மைச் செயலாளருக்குத் தொலைபேசி வழி தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் செய்தியே அமலாக்கத்துறையிடம் இருந்து ஆளுநர் மாளிகைக்குக் கிடைத்த முதல் செய்தி,” என்று ஆளுநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.