தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டுப் பேரை கத்தார் விடுவித்தது

2 mins read
18029457-2fcf-48e0-ab0d-20cae0fb165d
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரிகள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இஸ்‌ரேலுக்காக வேவு பார்த்ததாகக் கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டுப் பேரை கத்தார் பிடித்து வைத்திருந்தது.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த எட்டுப் பேரையும் கத்தார் விடுவித்துவிட்டதாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.

விடுதலை செய்யப்பட்ட அந்த எட்டுப் பேரைப் பற்றியோ அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரங்கள் குறித்தோ இந்திய வெளியுறவு அமைச்சு தகவல் தெரிவிக்கவில்லை.

வழக்கு தொடர்பாக கத்தார் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்ட அந்த எட்டுப் பேரில் இந்தியக் கடற்படையின் முன்னாள் உயர் அதிகாரிகளும் அடங்குவர் என்று இந்திய ஊடகம் தெரிவித்தது. அவர்களில் சிலர் போர்க் கப்பல்களுக்குத் தலைமைதாங்கியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த எட்டுப் பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதுகுறித்து இந்தியா அதிர்ச்சி தெரிவித்தது.

ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களது தண்டனை குறைக்கப்பட்டது.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

“அந்த எட்டுப் பேரும் டாரா குளோபல் நிறுவனத்துக்காகப் பணிபுரிகின்றனர். அவர்கள் கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை இந்திய அரசாங்கம் வரவேற்கிறது. அந்த எட்டில் ஏழு பேர் இந்தியா திரும்பிவிட்டனர்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த எட்டு இந்திய நாட்டவரை விடுதலை செய்ததற்காக கத்தார் மன்னர் ஷேக் தமிம் ஹமாட் அல் தானிக்கு இந்திய வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்